நரகம் என்றால் என்ன?

 

நரகம் உண்டு எனவும் சிலர் இல்லை எனவும் கூறுகின்றனர். வேதம் நமக்கு பழைய ஏற்பாட்டிலும், புதிய ஏற்பாட்டிலும் நரகத்தைப் பற்றி என்ன போதிக்கிறது என்பதைப் பார்க்கலாம்.

அநேகர் நரகம் என்ற வார்த்தையை தவறாக புரிந்து கொண்டிருக்கிறார்கள். மேலும் சிலர் நரகம் என்றால் நித்திய வேதனை என்ற கருத்தை கொண்டிருக்கிறார்கள். இது இருண்ட காலத்தில் கிறிஸ்தவ மதத்தில் சேர்க்கப்பட்ட தேவனற்ற ஜனத்தின் கருத்தாகும். வேதத்தில் சொல்லப்படும் நரகத்தை பற்றிய உண்மையை நம்பாமல், இருண்ட காலத்தில் சொல்லப்பட்ட கருத்தை இவர்கள் நம்புகிறார்கள்.

 

உலகம் முழுவதும் இன்று எல்லா மதங்களுமே நரகம் என்ற முடிவற்ற கொடிய வாதிக்கப்படுதலை, சித்ரவதையை போதித்துக் கொண்டிருக்கின்றன. ஆகையால் நாம், வேதத்தில் நமக்குச் சொல்லப்பட்ட நரகத்தைக் குறித்து நன்கு படித்து, கவனமாக ஆராய வேண்டியது மிக முக்கியமாகும்.

பழைய ஏற்பாட்டில் நரகம் (Hell) என்று மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் ஒரே எபிரேய வார்த்தை ஷியோல் (Sheol) என்பதாகும். புதிய ஏற்பாட்டில் இதற்கு தொடர்பான கிரேக்க வார்த்தை ‘ஹெடேஸ்’ (Hades) என்பதாகும்.

வேதாகமத்தில் ‘ஷியோல்’ மற்றும் ‘ஹெடேஸ்’ 41 தடவைகள் நரகம் என்றும், 32 தடவைகள் கல்லறை என்றும் , 3 தடவைகள் குழி என்றும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. அடிக்கடி பாதாளம் நரகம் என்றும். நரகம் பாதாளம் என்றும் பொருள் படுத்தப்பட்டிருக்கிறது.(சங் 49:15; 55:15; 86:13; ஏசாயா 14:9;  யோனா 2:2,  1கொரி 15:55; வெளி 20:13 )

 

Revised version (RV), Revised Standard Version (RSV),  போன்ற ஆங்கில வேதாகம மொழிபெயர்ப்பாளர்கள் இந்த நரகம் (Hell) என்ற விவகாரத்தை தள்ளி வைத்துவிட்டு, ஷியோல் (Sheol) மற்றும் ஹெடேஸ் (Hades) வார்த்தைகளை மொழிபெயர்க்காமல் அப்படியே உபயோகித்து இருக்கிறார்கள். அதனால் 76 இடங்களிலும் ஒரே பொருளில் இதனை கருத்தில் கொள்ள உதவுகிறது.

இயேசு “தம்முடைய ஆத்துமாவை மரணத்திலூற்றி” (ஏசாயா 53:10, 12 ) பாதாளத்திற்கு இறங்கினார். ஆனால் அவர் ஆத்துமா பாதாளத்தில் (நரகம் – Hell - Sheol )விட்டு வைக்கப்படவில்லை. (சங் 16:10, அப் 2:27,31 )

 

பழைய ஆங்கில மொழியில் ‘ஹெல்’ (Hell) என்ற வார்த்தையின் சரியான அர்த்தம் ‘மறைத்துக்கொள்’ அல்லது ‘மூடிக்கொள்’ என்பதாகும். ‘helling the potatoes’ என்றால் உருளைக்கிழங்குகளை குழியில் புதைத்தல் என்று பொருள். ‘helling a house’  என்றால் மூடுவது அல்லது கூரை போடுவது என்பதாகும். இருண்ட காலத்தில் இறையியல் மேதைகள் நரகம் என்பதற்கு ‘வேதனை மிகுந்த இடம்’ என்ற தவறான அர்த்தத்தை புகுத்தும் முன் அந்தச் சொல், ‘ரகசிய, மறைந்து இருக்கும் மரண நிலை’ என்ற  சரியான கருத்தையே குறித்தது. அதன்படி பார்த்தால் நரகம் ( Sheol or Hades) என்றால், தன் நினைவற்ற உணர்வற்ற மரண நிலையைத்தான் குறிக்கிறது.

 

நரகம் என்றால் நெருப்பு, வேதனை, கூக்குரல் நிறைந்த ஓர் இடம் எண்ட கருத்திற்கு மாறாக, மரித்தவர்கள் ஒன்றும் அறியார்கள்”...“செய்யும்படி உன் கைக்கு நேரிடுகிறது எதுவோ, அதை உன் பெலத்தோடு செய்; நீ போகிற பாதாளத்திலே (Sheol) செய்கையும் வித்தையும் அறிவும் ஞானமும் இல்லையே”. - பிர 9: 5,10

“மரணத்தில்  உம்மை நினைவு கூர்வதில்லை, பாதாளத்தில் (Sheol) உம்மை துதிப்பவன் யார்?” “பாதாளம் (Sheol) உம்மைத் துதியாது. மரணம் உம்மை போற்றாது”. “அவனுடைய ஆவி பிரியும், அவன் தன் மண்ணுக்குத் திரும்புவான்; அந்நாளிலே அவன் யோசனைகள் அழிந்துபோம்.

( சங் 6:5, 71:20, 146:4; ஏசாயா 38:18 ) என்று வேதம் கூறுகிறது.

 

 

நல்லோரும், தீயோரும் இறந்தபின் பாதாளத்திற்கு ( Sheol )  போவார்கள். உதாரணமாக யாக்கோபு ‘துக்கத்தோடு என் குமாரனிடத்தில் பாதாளத்தில் ( Sheol ) இறங்குவேன் என்றான்.  (ஆதி 37:35 ). யோபு தேவனிடத்தில் தன்னை பாதாளத்தில் ( Sheol ) உயிர்த்தெழுதல் மட்டும் மறைத்து வைக்கும்படி கூறுகிறான். (யோபு 14:,13). “மனுஷனோவென்றால் செத்தபின் ஒழிந்துபோகிறான், மனுபுத்திரன் ஜீவித்துப்போனபின் அவன் எங்கே?”. அப்போது தூளில் ஏகமாய் இளைப்பாறுவோம் என்றான்.” (யோபு 14:10; 17:16). நல் ஆத்துமாவும் தீய ஆத்துமாவும் உணர்வுகளற்ற மரண நிலைக்கே போகிறார்கள். அதிலிருந்து மரித்தோரின் உயிர்த்தெழுதலே ஒருவனை மீட்க முடியும்.

 

தேவன் ஆதாமிடம் பாவத்திற்கான தண்டனையை பற்றி கூறும்போது, “அதைப் புசிக்கும் நாளிலே நித்தியமாய் வேதனையை அனுபவிப்பாய்” என்று கூறவில்லை. ஆனால் “சாகவே சாவாய்” (ஆதி 2:17 ) அதாவது உயிரோடு இருக்கமாட்டாய் (ஜீவன் அற்றவனாய் இருப்பாய்)என்ற உண்மையைத்தான் சொன்னார். ஆதாம் புசிக்க வேண்டாம் என்று தேவனால் சொல்லப்பட்ட அந்த கனியை புசித்த அதே நாளில் ( 1000 வருடம் கொண்ட நாள் – 2 பேது 3:8  சங் 90:4 ) 930 வருடங்கள் வாழ்ந்து மரித்துப் போனான்.

 

தேவன் சொன்னதற்கு மாறாக பிசாசானவன் “நீங்கள் சாகவே சாவதில்லை” என்று பொய் சொன்னான். ஏனென்றால் அவன் இதன் மூலம் கிறிஸ்துவின் உயிர்தெலுதலின் முக்கியத்தை உலகம் காணமுடியாதவாறு செய்கிறான். அவன் பொய்யனும், பொய்க்கு பிதாவுமாயிருக்கிறான். (யோவான் 8:44 ) அன்றிலிருந்து, மரித்தவர்கள் உண்மையில் மரிக்கவில்லை, மரித்தாலும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். நியாயத் தீர்ப்பின் நாளுக்கு காத்திருக்காமல், பரலோகத்திற்கோ அல்லது நித்திய வேதனைக்கோ சென்று விடுகிறார்கள் என்று அநேகரை ஏமாற்றிக் கொண்டிருக்கிறான். ஆனால் வேதாகமம் தெளிவாக எடுத்துச் சொல்கிறது, “மரித்தவர்கள் ஒன்றும் அறியார்கள்”, “மரித்தவர்களும், மவுனத்தில் இறங்குகிற அனைவரும் கர்த்தரைத் துதியார்கள்”. அவன் பிள்ளைகள் கனமடைந்தாலும் அவன் உணரான்”. “ஆபிரகாம் எங்களை அறியான் இஸ்ரவேலுக்கு (யாக்கோபுக்கு) நாங்கள் அறியப்பட்டவர்க்களும்மல்ல” (பிரசங்கி 9:5, சங் 115:17, யோபு 14:21, ஏசாயா 63:16 )

 

பரலோகத்திலிருந்து இறங்கின இயேசு ஒருவரே  அல்லாமல் பரலோகத்துக்கு ஏறினவன் ஒருவருமில்லை (யோவான் 3:13 அப் 2:34 ) என்று கிறிஸ்து சொல்லியிருக்கிறாரே.

 

வேதம் தெளிவாகச் சொல்லுகிறது, “பாவம் செய்கிற ஆத்துமாவே சாகும்” (எசேக் 18:4,20 ). பாவத்தின் சம்பளம் மரணம்” (ஜீவனின் முடிவு – வேதனை அனுபவிக்கும் வாழ்க்கை அல்ல). ஆனால் “தேவனுடைய கிருபை வரமோ நம்முடைய இயேசு கிறிஸ்துவினால் உண்டான நித்திய ஜீவன்”. இந்த வரத்தை துன்மார்க்கனுக்கு தேவன் கொடுப்பதில்லை. (1 யோவான் 3:15, 5:12, ரோமர் 6:23, அப் 4:12 )

 

“எல்லோரையும் (ஆதாமையும் அவன் சந்ததியையும் ) மீட்கும் பொருளாகத் தம்மை ஒப்புக்கொடுத்த மனுஷனாகிய கிறிஸ்து இயேசு அவரே”. (1தீமோ 2:4-6, யோவான் 3:16 ), இது குறித்த காலத்தில் விளங்கவிருக்கிறது. ஆதாமுக்கும் அவன் சந்ததிக்கும் உரிய தண்டனை (அபராதம்) நித்திய ஆக்கினையாக இருப்பின் அந்த தண்டனையைத்  தீர்க்க இயேசுவும் எல்லோருக்காகவும் நித்தியமாய் ஆக்கினையை அடைய வேண்டியதிருக்கும் அல்லவா? ஆனால் பாவத்தின் சம்பளம் மரணமே, ஆதலால் “கிறிஸ்துவானவர் நமது பாவங்களுக்காக மரித்தார்”. ஒவ்வொருவருக்காகவும் மரணத்தைத்தான் ருசிபார்த்தார். அவர் மரித்தோரில் இருந்துதான் எழுப்பப்பட்டார். ( 1 கொரி 15:3,4; எபி 2:9; ரோமர் 5:6-10; கொலோ 1:18; வெளி 1:18 )

 

மரித்த நல்லவரும், தீயவரும் நித்திரையடைந்திருக்கிறார்கள் என்று வேதம் சொல்கிறது. ( 2 பேது 3:4; 2 இராஜா 21:18; யோவா 11:11-14; 1 தெச 4:13-17 ). அதாவது சுய நினைவற்ற , உணர்வற்ற நிலையில் இருந்து எழுப்பப்படுவதற்காக ஷியோல் அல்லது ஹெடஸில் (பாதாளத்தில்) காத்திருக்கிறார்கள். மரித்தோர் உயிர்த்தெழுதல் இல்லாவிட்டால்... கிறிஸ்துவுக்குள் நித்திரையடைந்தவர்களும் கெட்டிருப்பார்களே (அழிந்திருப்பார்களே) என்று வேதம் கூறுகிறது. ( 1 கொரி 15:13-18).

 

தேவன் கிறிஸ்துவின் மூலமாக நித்திய ஆக்கினையிலிருந்து அல்ல ஆனால் பாதாளத்தின் (ஷியோல்) வல்லமைக்கே எல்லோரையும் நீங்கலாக்கி மீட்கிறார். (ஓசியா  13:14 ).  இயேசு தமது இரண்டாம் வருகையில் மரித்தோரை உயிரோடு எழுப்பும் முன் மரணத்திலிருந்து ஒருவனும் எழுந்திருப்பதில்லை. (யோவான் 14:3, 1 கொரி  15:21-23, 52 ). பரிசுத்த பவுலும் மற்றவர்களும் தங்களது ஜீவ கிரீடத்தையும் மற்றும் பலன்களையும் பெற்றுக் கொள்ளும் முன் (2 தீமோ 4:8; 1 பேதுரு  1:5; 5:4 லூக்கா 14:14 ) ஒருவரும் மரணத்திலிருந்து எழுந்திருப்பதில்லை அல்லவா!

 

பிரேதக் குழிகளிலுள்ள அனைவரும் இயேசுவினுடைய சத்தத்தைக் கேட்டு புறப்படுவார்கள் (யோவான் 5:28,29 ). ஆதாமுக்குள் நித்திரையடைந்தவர்களை பாதாளத்திலிருந்து விடுவிக்கும்போது பாதாளம் நிரந்தரமாக இல்லாமல் போகும்; “பாதாளமே நானே உன் சங்காரமாயிருப்பேன். (அழிவாயிருப்பேன்) நானே உன்னை சங்கரிப்பேன் (அழிப்பேன் O grave [sheol] I will be thy destruction";) மரணமும், நரகமும், பாதாளமும், பிசாசும், மிருகமும் கள்ளத் தீர்க்கதரிசியும் மரணத்துக்கேதுவான பாவிகளும் அக்கினிகடலிலே தள்ளப்படுவர். அக்கினி பொருட்களை சுட்டெரித்து அழித்து விடுவதால் வேதாகமத்தில் அக்கினிக் கடல் நிரந்தர அழிவைக் குறிக்க அடையாளமாக பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இது இரண்டாம் மரணத்தைக் குறிக்கிறது. அளவற்ற முழுமையான, நித்திய அழிவிலிருந்து எவரும் மீட்க்க முடியாது. (ஓசியா 13:14; வெளி 19:20, 20:14,15, 21:8, கலா 6:8, எபி 6:4-8, 10:26-31, 12:29,  1 யோவான் 5:16, யூதா 12,13 ).

 

வெளி 20:10, 14:10,11 இல் சொல்லப்பட்ட ‘வாதிக்கப்படுவார்கள்’, என்ற சொல் ‘சோதிக்கப்படுவார்கள்’, ‘பரீட்சிக்கப்படுவார்கள்’ என்று மொழிபெயர்க்கப்பட்டிருக்க வேண்டும். பிசாசும், மிருகமும், கள்ளத்தீர்க்கதரிசியுமானவனின், தீய செயல்களும் போதகங்களும் நீதிமான்களால் சோதிக்கப்பட்டு  தேவநீதியின்படியே அவர்கள் அழிவிற்குரியவரானார்கள் (ஏசாயா 14:15-17) என்று இரவும் பகலும் சோதித்தறியப்படுவார்கள்.  

 

துன்மார்க்கர் நித்திய அழிவாகிய தண்டனையை அடைவார்களா? 2 தெச 1:10, அவர்கள் “தங்களுக்குத் தீவிரமான அழிவை வருவித்துக் கொள்வார்கள்”, (2 பேது 2: 1,12 ), “அவர்களுடைய முடிவு அழிவு”  (பிலி 3:19 ). அவர்கள் “நித்திய அழிவாகிய தண்டனை அடைவார்கள் ( நித்தியமாக வதைக்கப்படுதல் அல்ல ) யாக்கோபு  1:15, 4:12 ) ஏனென்றால் “பாவம் பூரணமாகும்போது மரணத்தைப் பிறப்பிக்கும்”, நித்திய மரணம் நித்திய தண்டனை ஆகும். ஆனால் நீதிமான்களோ “நித்திய வாழ்வை அடைவார்கள்”. மத்தேயு 25:46

 

மேலும் புதிய ஏற்பாட்டில் கிஹென்னா (gehenna) என்ற வார்த்தையும், நரகம் என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. பழைய ஏற்பாட்டில் இது கி-ஹின்னோம்  ( ge-hinnom ) பள்ளத்தாக்கு என்பதாகும். இந்த பள்ளத்தாக்கு எருசலேமுக்கு வெளியே இருந்தது. எருசலேம் பட்டணத்தின் கழிவுப் பொருட்கள் அங்கே போடப்பட்டு, புழுக்களாலும் நெருப்பினாலும் கந்தகத்தினாலும் அழிக்கப்பட்டன. அங்கே குப்பைகளையும் அதிலுள்ள கிருமிகளையும் அழிக்க தொடர்ந்து நெருப்பு எரிந்து கொண்டிருந்தது.

“அங்கே அவர்கள் புழு சாகாமலும், அக்கினி அவியாமலிருக்கும்” மாற்கு 9:43-48. இது ஏசாயா 66:24 லிருந்து எடுக்கப்பட்டது. இதில் மில்லினிய காலகட்டத்தில் நடக்கும் ஒரு காரியம் காட்டப்பட்டுள்ளது. பிரேதங்களும் அவைகள் புழுக்களால் அழிக்கப்பட்டுக் கொண்டிருத்தலையும் காட்டுகிறது. எனவே இது நித்திய வதையை காட்டவில்லை, இரண்டாம் மரணத்தை காட்டுகிறது. ...விக்கிரகாராதனைக்காரரும், பொய்யர் அனைவரும் இரண்டாம் மரணமாகிய அக்கினியும் கந்தகமும் எரிகிற கடலிலே பங்கடைவார்கள் என்றார். வெளி 21:8  , வெளி 20:14 ,15

 

துன்மார்க்கரை கடவுள் அழிப்பது உறுதி. அந்த அழிவு, கி-ஹின்னோம் பள்ளத்தாக்கில் போடப்பட்ட கழிவுப்பொருட்கள் புழுக்களினாலும், நெருப்பினாலும் முற்றிலும் அழிந்து போவதைப் போன்றதாகும் என்று வேதத்தில் காட்டப்பட்டுள்ளது. தேவன் ஆத்துமாவையும் சரீரத்தையும் நரகத்திலே ( பள்ளத்தாக்கிலே ) அழிக்க வல்லவர் ( மத் 10:28, எசே 18:4,20 அப் 3:23 சங் 145:20 ஒபதியா 16 ஏசா 43:17.

 

தேவன் நீதியும், செம்மையுமானவர் (உபா 32:4). அவனவன் பாவத்துக்குத் தக்கதாக தண்டிப்பார் (மத் 12:36, லூக் 12:47,48). ஆனால் அவரது நீதி அவர் சொன்ன தண்டனையாகிய மரணத்திலிருந்து நம்மை தடுத்து நிறுத்துகிறது. ஒரு சராசரி மனிதனனுக்கு ஒரு பூனையைக் கூட ஒரு நிமிஷமாகிலும் தீயில் துன்புறுத்த மனம் இணங்காது. “மனுஷன் தேவனைப் பார்க்கிலும் நீதிமானாயிருப்பானோ?” மனுப்புத்திரன் தன்னை உண்டாக்கினவரைப் பார்க்கிலும் நீதிமானாயிருப்பானோ? “அநீதி சர்வவல்லவருக்கு தூரமாயிருக்கிறது.” என்று சொல்லப்படிருக்கிறதே (யோபு 4:17, 34:10)

 

“தேவன் அன்பாகவே இருக்கிறார்” “நாம் ஆவியோடும் உண்மையோடும் அவரைத் தொழுது கொள்ள வேண்டும்” என்று விரும்புகிறார். இம்மையிலும் மறுமையிலும் உள்ள நியாயத்தீர்ப்புக்கு பயந்து அல்ல, அவர் மேல் நாம் கொண்ட அன்பினால் அவரைத் தொழுது கொள்ள வேண்டும். “பூரண அன்பு பயத்தை புறம்பே தள்ளும்” (1 யோவான் 4:8-12, 16-21 )

 

 

YYYYYYY