யுகங்களுக்கான தேவ திட்டம்

பூமியில் எல்லா ஜனங்களுக்கும் கடவுள் உயிர்த்தெழுதலையும், நோய்கள் மரணமற்ற நித்திய வாழ்க்கையையும் கொடுக்க விருப்பமுள்ளவராயிருக்கிறார். அதுவே அவருடைய பூமிக்குரிய திட்டமாய் இருக்கிறது.

பரலோகத்திலுள்ள தேவதூதர்கள் சாகிறதில்லை என்றும், மனிதனும் சாக வேண்டியவனாக கடவுள் படைக்கவில்லை என்றும், மனிதன் பாவம் செய்யாது கீழ்ப்படிந்து இருந்தால் சாகாமல் இருக்கமுடியும் என்றும் தெரியுமா? ஆதி 3: 22-24

கடவுளின் படைப்புகளாகிய வானலோகங்களில் இருக்கிற நல்ல தேவதூதர்கள் கடவுளுக்கு கீழ்ப்படிந்து இருப்பது போல தன்னிடம் உயிரை பெற்ற மனிதனும் கீழ்ப்படிய தேவன் எதிர்பார்க்க உரிமை இருக்கிறது.

ஆனால் மனிதன் பாவம் செய்தால் நீதியுள்ள தேவன் தொடர்ந்து உயிராதாரத்தை கொடுத்துக் கொண்டு இருக்க முடியாது. ஆகவே மரணம் தீர்ப்பாக வருகிறது. ஆனால் உலகில் அநேகர் கூறுவது போல மனிதனுக்கு தண்டனை அக்கினி எரியும் நரகத்தில் முடிவில்லாது சித்ரவதை செய்யப்படுவது அல்ல. அப்படி முடிவே இல்லாமல், நோக்கமில்லாது வாதித்துக் கொண்டே இருப்பது அன்பாகவே இருக்கும் கடவுளின் குணமும் அல்ல.

ஆகவே தீமையான இந்த உலக அமைப்பை அழித்து தேவனுடைய அரசாட்சியை கொண்டு வரப்போகிறார். அவருடைய ஆளுகையில் எல்லா மனிதர்களையும் மரணமற்ற நித்திய வாழ்க்கை பெற தகுதியுள்ளவர்களாக்குவதற்கு நீதியை கற்றுக் கொடுப்பார். அங்கு தேவனுக்கு கீழ்ப்படிந்து சுயநலமற்ற அன்புள்ள மனிதர்களாக மாறுபவர்களுக்கு மரணமற்ற நிரந்தர மகிழ்ச்சியான வாழ்க்கையை கொடுப்பார்.

அந்த தேவ திட்டத்தை பற்றியும் அதில் நாம் எப்படி பங்குகொள்வது, தேவனுடைய அரசாங்கத்துக்கு நம்மை தகுதியாக்கிக் கொள்வது எப்படி என்பதை பற்றி கற்றுக் கொள்வதே எங்களது நோக்கம்.

இந்த ஊழியம் குற்றப்படாத படிக்கு, நாங்கள் யாதொன்றிலும் இடறல் உண்டாக்காமல், எவ்விதத்தினாலேயும், எங்களைத் தேவ ஊழியக்காரராக விளங்கப் பண்ணுகிறோம்.

- 2 கொரிந்தியர் 6:3,4,8

எங்களது ஐக்கியம்

நாங்கள் வேதாகம சத்தியங்களை ஆழ்ந்து படிக்கும் சத்தியத்திற்காக நிற்கும், எளிமையான சகோதரர்களின் ஐக்கியமாக சத்தியத்தின்படி இயங்கும் ஒரு இயக்கமாக இருக்கிறோம். எந்த ஒரு மானிட ஸ்தாபனத்தையோ நாசியில் சுவாசமுள்ள எந்த ஒரு மனிதனையோ உயர்த்தாது, வேத சத்தியத்தையே உயர்த்தி மகிமைப் படுத்துகிற ( 2 தீமோ 4: 3-5 ) சபை பாகுபாடு அற்ற கொள்கை பிரிவு அற்ற ஒரு ஐக்கியமாக இருக்கிறோம். ( 1 தெசலோ 2: 3-5 )

இந்த ஐக்கியம் எந்தவொரு மனுஷருடைய கற்பனைகளாலும், நிர்வாக ஒழுங்குகளினாலும் கட்டுப்பட்டிருக்காது ( மத்தேயு 15:9 ), தேவ தீர்மானத்தைப் பற்றிய சத்திய அறிவினால் ஈர்க்கப்பட்டு(மத்தேயு 24:28 ) இருதயத்தில் சுயமாய் ஒருமைப்பட்ட ( எபே 4:3 ,பிலிப் 2:2 ) ஆவியின் இயக்கமாகும். ( யாக் 1:25 )

இதற்கும் வேறெந்த மார்க்க பேத வகுப்பாருக்கும், இயக்கங்கள், கூட்டங்களுக்கும் ஒருவித சம்பந்தமும் கிடையாது.

தேவனுடைய வார்த்தைகள் விதைக்கப்பட்ட வயலாகிய கிறிஸ்தவ மண்டலத்தில், சத்துரு விதைத்த விதைகளால் செழித்து வளர்ந்திருக்கும் தப்பறைகளை உணர்த்தி வருகிறோம். கிறிஸ்துவின் ராஜ்ஜியம் பூமியில் ஸ்தாபிக்கப் படுவது பற்றிய நிகழ்கால சத்தியத்திற்கு சாட்சி கூறியும் ( மத் 6:10; ஏசா 2:2; வெளி 21:3), வரவிருக்கும் அர்மகெதொன் யுத்தம் பற்றி எச்சரித்தும் வருகிறோம் (வெளி 16:16,13 ), இது சத்தியத்திற்கு கீழ்ப்படிகிறவர்களுக்கு அழைப்பு கொடுத்து தொனிக்கிற எக்காளமாகவும் இருக்கிறது. ( வெளி 18:4; ஏசா 52:11; எரே 51:6 )


மேலும் படிக்க