Basic Articles
இந்த கிறிஸ்துமஸ் காலத்தில் மற்றவர்களுக்கு வாழ்த்துக் கூறும் கிறிஸ்தவ நண்பரே, கிறிஸ்து பிறந்ததை நினைவு கூறும் பண்டிகை என்று கூறி வாழ்த்து சொல்கிறீர்களே, உலகத்துக்கு என்ன வாழ்த்துதலை சொல்கிறீர்கள்?
கிறிஸ்து பிறந்து விட்டார் ஆகவே உலகத்துக்கு மிகுந்த சமாதானம் எல்லா ஜனத்துக்கும் மிகுந்த சந்தோசம் என்று கூறுகிறீர்களா? ஆனால் கிறிஸ்தவ சபை கோட்பாடுகள் போதனைகள் என்ன சொல்கிறது? கிறிஸ்துவை ஏற்றுக் கொள்ளாவிட்டால் நரக வேதனை என்றும், ஏற்றுக் கொள்ளும் கிறிஸ்தவர்கள் மட்டுமே பரலோகம் செல்வார்கள் என்றும் சொல்கிறார்களே. ஒரு சிறு கூட்டமான பரிசுத்தவான்கள் மட்டும் பரலோகம் சென்றுவிடுவார்கள், பூமி முழுவதும் அக்கினியால் அழிக்கப்படும் என்றால் அது சமாதானமான செய்தியா? அது எல்லா ஜனத்துக்கும் சந்தோஷமான செய்தியா?
ஆனால் வேதாகமத்தில் யேசு கிறிஸ்துவின் பிறப்பைக் குறித்து “இதோ, எல்லா ஜனத்துக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன்.” (லூக்கா 2:10) என்று சொல்லப்பட்டிருக்கிறது.
இன்றைய கிறிஸ்தவர்கள் எல்லா ஜனத்துக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் இந்த நற்செய்தியை அறிவிக்காமல், இந்த உலகில் கிறிஸ்துவை அறியாதவர்கள் புற மதத்தவர் எல்லோரும் உயிர்த்தெழுப்பப்பட்டு வேதனையை அனுபவிக்க நரகத் தீயில் தள்ளப்படுவார்கள் என்று தவறான போதனையை பரப்புகிறார்கள்.
“ஆதாமுக்குள் எல்லாரும் மரிக்கிறதுபோல, கிறிஸ்துவுக்குள் எல்லாரும் உயிர்ப்பிக்கப்படுவார்கள்.” – 1 கொரி 15:22. மரணத்தில் இருந்து எழுப்புவது அவர்களை திருத்தி தம்மிடம் கூட்டிச் சேர்க்கவே, “அதென்னவெனில், தேவன் உலகத்தாருடைய பாவங்களை எண்ணாமல், கிறிஸ்துவுக்குள் அவர்களைத் தமக்கு ஒப்புரவாக்கி,...” - 2 கொரி 5:19 ,
உயிர்த்தெழுந்தபின் தீமையை வெறுக்கவும் நீதியாய் நடக்கவும் கிறிஸ்துவின் ஆளுகையில் கற்றுக் கொள்வார்கள். “உம்முடைய நியாயத்தீர்ப்புகள் பூமியிலே நடக்கும்போது பூச்சக்கரத்துக்குடிகள் நீதியைக் கற்றுக்கொள்வார்கள்.” – ஏசாயா 26:9
நியாயத்தீர்ப்பு நாளான கிறிஸ்துவின் நாள் என்று சொல்லப்படும் அவரது ஆளுகையில் பூமியின் ஜனங்கள் எல்லோரும் உண்மையான ரட்சகரை கண்டுகொண்டு அவரிடம் வருவார்கள். தீமையான காரியங்கள் உடனே தண்டிக்கப்படுவதால் அநியாயம் குறைந்து இல்லாமல் போகும். மனுக்குலம் முழுவதும் ஒரே ராஜாவின் கீழ் ஒரே நீதியான ராஜ்யத்தில் மிகுந்த ஆசீர்வாதத்துடன் இருக்கும்.
“கடைசிநாட்களில் கர்த்தருடைய ஆலயமாகிய பர்வதம் பர்வதங்களின் கொடுமுடியில் ஸ்தாபிக்கப்பட்டு, மலைகளுக்கு மேலாய் உயர்த்தப்படும்; எல்லா ஜாதிகளும் அதற்கு ஓடிவருவார்கள்.
அவர் ஜாதிகளுக்குள் நியாயந்தீர்த்து, திரளான ஜனங்களைக் கடிந்து கொள்வார்; அப்பொழுது அவர்கள் தங்கள் பட்டயங்களை மண்வெட்டிகளாகவும், தங்கள் ஈட்டிகளை அரிவாள்களாகவும் அடிப்பார்கள்; ஜாதிக்கு விரோதமாய் ஜாதி பட்டயம் எடுப்பதில்லை, இனி அவர்கள் யுத்தத்தைக் கற்பதுமில்லை.” – ஏசாயா 2:2, 4
ஆகவே வேதாகமம் நியாயத்தீர்ப்பு நாளில் மனுக்குலம் முழுவதும் நீதியில் வளர, கிறிஸ்துவிடம் சேர்க்கப்பட இன்னொரு வாய்ப்பு கொடுக்கப்பட்டு இருப்பதை பற்றி கூறுகிறது.
“பூமியின் எல்லைகளெல்லாம் நமது தேவனுடைய இரட்சிப்பைக் கண்டது. பூமியின் குடிகளே, நீங்களெல்லாரும் கர்த்தரை நோக்கி ஆனந்தமாய் ஆர்ப்பரியுங்கள்; முழக்கமிட்டுக் கெம்பீரமாய்ப் பாடுங்கள்.” சங்கீதம் 98:3, 4
இந்த பூமியில் நியாயத்தீர்ப்பு நடைபெறும் நாட்களில் பூமி தீமைகள் அற்று செழிப்புடன் இருக்கும் என்று கூறுகிறது. இப்பொழுது பரலோகத்தில் கடவுளின் சித்தம் செயல்படுவது போல பூமியிலும் அவருடைய சித்தத்தின் படியே காரியங்கள் நடக்கும். இதற்காக ஜெபிக்க நமது ரட்சகர் யேசு கிறிஸ்துவும் கற்றுக் கொடுத்திருக்கிறார். “உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோலப் பூமியிலேயும் செய்யப்படுவதாக.” மத்தேயு 6:10
துன்மார்க்கரின் முடிவு என்ன?
ஆயினும் ஆயிரவருட அரசாட்சியில் முற்றிலும் திருந்தாத, கபடுள்ளவர்கள் நியாயத்தீர்ப்பு காலத்தின் இறுதியில் இரண்டாம் மரணத்துக்குள் போவார்கள், அதாவது நிரந்தரமாக அழிக்கப்படுவார்கள். இது நித்தியமான அழிவு, மாறாக நித்திய வேதனை அல்ல. நித்தியமாக அவர்களை எந்த ஒரு நோக்கமும் இல்லாமல் நரகத்தில் உயிரோடு வைத்துக் கொண்டிருக்க அவசியம் இல்லை. தேவனும் துன்மார்க்கன் நித்தியமாய் இருக்க அனுமதிக்கவில்லை. கீழ்ப்படிகிறவர்களுக்கு கிறிஸ்துவின் மூலம் நித்திய ஜீவன், கீழ்ப்படியாதவர்களுக்கு பாவத்திற்கான தண்டனை மரணம் என்று வேதாகமம் தெளிவாக சொல்கிறது.
“பாவஞ்செய்கிற ஆத்துமாவே சாகும்.” – எசேக்கியேல் 18:4
“பாவத்தின் சம்பளம் மரணம்.”
“தேவனுடைய கிருபை வரமோ நம்முடைய இயேசு கிறிஸ்துவினால் உண்டான நித்திய ஜீவன்”. - ரோமர் 6:23 இந்த வரத்தை துன்மார்க்கனுக்கு தேவன் கொடுப்பதில்லை.
இந்த தீமைகள், பாவம் நுழைய காரணமான சாத்தானையே தேவன் நிரந்தரமாக அழிக்கப் போகிறார். ஆகவே துன்மார்க்கரும் அவனோடு சேர்ந்து அழிந்து, இனி ஒருபோதும் இருக்கப் போவதில்லை. (அக்னி = அழிவு , நித்திய அக்கினி = நிரந்தர அழிவு )
“மரணத்துக்கு அதிகாரியாகிய பிசாசானவனைத் தமது மரணத்தினாலே அழிக்கும்படிக்கும்,” எபிரெயர் 2:14
“இனி ஒருபோதும் இருக்கமாட்டாய் என்று உரைக்கிறார்” – எசேக்கியேல் 28: 14, 19
பூரண நீதியும் பூரண அன்பும் கொண்ட கடவுள்:
நித்தியமாய் வதைத்துக் கொண்டிருக்க அவர் கொடூர மனம் கொண்டவர் அல்ல. நமது வல்லமையுள்ள தேவன் அன்பாகவே இருக்கிறார். மற்றும் பூரண நீதியுள்ளவராகவும் ஞானமுள்ளவராகவும் இருக்கிறார்.
“ துன்மார்க்கன் சாகிறது எனக்கு எவ்வளவேனும் பிரியமோ? அவன் தன் வழிகளை விட்டுத் திரும்பிப் பிழைப்பது அல்லவோ எனக்குப் பிரியம் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.” - எசேக்கியேல் 18:23
“எல்லா மனுஷரும் இரட்சிக்கப்படவும், சத்தியத்தை அறிகிற அறிவை அடையவும், அவர் சித்தமுள்ளவராயிருக்கிறார்.” 1 தீமோ 2:4
இந்த நீதியான ஞானமுள்ள தேவனுடைய திட்டம் எவ்வளவு அருமையாக சந்தோஷத்தை கொடுக்க கூடியதாக இருக்கிறது! உண்மையாகவே இது எல்லா ஜனத்துக்கும் மிகுந்த சந்தோஷத்தை கொடுக்கும் நற்செய்தி.
தவறான போதனைகள் எப்படி வந்தது?
ஆனால் ஆதி சபையில் அப்போஸ்தலர்கள் நித்திரையடைந்த பின், யேசு கிறிஸ்து எச்சரித்தது போலவே சாத்தான் வேதாகமத்தில் சொல்லப்படாத தவறான போதனைகளை கிறிஸ்தவ மண்டலத்தில் விதைத்து விட்டான்.
“ மனுஷர் நித்திரைபண்ணுகையில் (but while men slept, )அவனுடைய சத்துரு வந்து, கோதுமைக்குள் களைகளை விதைத்துவிட்டுப் போனான்.” – மத்தேயு 13:25
சாத்தானின் நரக உபதேசம் , மனிதர்கள் இறந்த பின்னும் ஆவியாக இருத்தல், உலகம் அக்கினியில் அழிந்து போதல் போன்ற தவறான கோட்பாடுகள் கடவுளின் குணத்தை கீழ்த்தரமாக, கொடூரமாக சித்தரிக்கிறது. மேலும் வேதாகமத்தில் உள்ள தேவ திட்டத்தை புரிந்து கொள்ள முடியாதபடி, கிறிஸ்தவர்களை குழப்பத்தில் வைப்பதற்கே சாத்தான் இந்த தவறுகளை விதைத்திருக்கிறான். வேதாகமத்தில் இல்லாத, தேவனை தூஷிக்கும் இந்த தவறான போதனைகளை இன்று கிறிஸ்தவ சபைகள் பிரசங்கித்துக் கொண்டிருக்கின்றன.
ஆகவே சாத்தானின் தவறான உபதேசங்களில் சிக்கிக் கொண்டிருக்கும் கிறிஸ்தவராக நீங்கள் இராதபடி விழித்து கொண்டு சத்தியத்தை கண்டு கொண்டு குழப்பத்தில் (பாபிலோன் அடையாளப்படுத்தும் கிறிஸ்தவ மண்டலம்.) இருந்து வெளியே வாருங்கள்.
“ என் ஜனங்களே, நீங்கள் அவளுடைய பாவங்களுக்கு உடன்படாமலும், அவளுக்கு நேரிடும் வாதைகளில் அகப்படாமலும் இருக்கும்படிக்கு அவளைவிட்டு வெளியே வாருங்கள்.”– வெளி 18:4
✡✡✡✡✡✡✡
மேலும் பல சத்தியங்களை விளக்கும் பிரதிகள் உள்ளன:
மரணம் என்றால் என்ன?
ஆத்துமா என்றால் என்ன?
நரகம் என்றால் என்ன?
இறந்துபோனவர்கள் மீண்டும் வருவார்களா?
அன்பின் கடவுள் தீமையை ஏன் அனுமதிக்கிறார்?
ஜெயிப்பது கடவுளா, சாத்தானா?
கிறிஸ்துவின் இரண்டாம் வருகை
பூமியில் தேவனுடைய ராஜ்ஜியம்
நியாயத்தீர்ப்பு நாள் என்பது என்ன?